கள்ள ஓட்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது! எல்.முருகன் வாக்களித்தார்
மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். ’’மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’’ என்று கேட்டிருந்தார்.
மத்திய அமைச்சரின் ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டு போட்டு விட்டதாக குற்றம் சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இதை மறுத்தார். அவர், எல். முருகன் ஓட்டை யாரும் போடவில்லை. அவர் எப்போது வந்தாலும் தனது வாக்கை செலுத்தலாம் என்று விளக்கமளித்திருந்தார். பி. முருகன் என்பவருக்கு எல்.முருகனின் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதன் பின்னர் சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியில் நியூ ஆவடி சாலை குஜ்ஜி தெருவில் உள்ள சென்னை மிடில் ஸ்கூலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாக்களித்தார்.
முன்னதாக பி. முருகன் என்பவர் வாக்கு பதிவு செய்ய வந்தபோது பூத் ஏஜெண்டுகள் தவறுதலாக எல். முருகன் பெயரில் அவரது வாக்குச்சீட்டில் டிக் செய்து விட்டார்கள். இதனால் எல். முருகனின் வாக்கினை கள்ள ஓட்டாக போடப்பட்டு விட்டது என்று அண்ணாமலை கொத்தெழுந்திருந்தார்.
இதை அடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் , வாக்களித்த பி. முருகன் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்ட பின்னர், வாக்குப்பதிவு மைய ஏஜென்ட் தவறுதலாக செய்தது தெரியவந்தது. இதன் பின்னரே தேர்தல் அலுவலர்கள் இது குறித்து விளக்கமளித்தனர். இதையடுத்து மத்திய இணை அமைச்சர்கள் முருகன் எந்த இடையூறும் இல்லாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்கு பதிவு செய்துள்ளார்.