×

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. நாடு முழுவதும் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தும் காங்கிரஸ் 

 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக நாடு முழுவதும் இன்று செய்தியாளர் சந்திப்பை காங்கிரஸ் நடத்துகிறது.


நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக  ஜூன் 2ம் தேதியன்று ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என்றும், சோனியா காந்தி ஜூன் 8 ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது, ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தார். ஆகையால் வரும் 13ம் தேதியன்று விசாரணைக்கு வரும்படி ராகுல் காந்திக்கு  அமலாக்கத்துறை புதிய சம்மன் வழங்கியது. அதேவேளையில், சோனியா காந்தி தற்போது தான் கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் காலஅவகாசம் தரும்படி அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்தார். 

இதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை வரும் 23ம் தேதியன்று விசாரணைக்கு வரும்படி புதிதாக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் 13ம் தேதியன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக உள்ளார். அன்றைய தினம் காங்கிரஸ் கட்சி தனது வலிமையை காட்டவும், தனது அரசியல் செய்தியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தெரிவிக்கவும் ஒரு பெரிய நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. 

இதற்காக வரும் 13ம் தேதியன்று அனைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய தலைநகரில் (டெல்லி) இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக நாடு முழுவதும் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.