×

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அரசு அதை நிராகரித்தது.. காங்கிரஸ்

 

பணவீக்கம் மற்றும் ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துதல் போன்றவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்தது என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா தெரிவித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தியிடம் இரண்டாவது முறையாக நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேசமயம், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக சென்றனர்.

ஆனால் விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்து கிங்ஸ்வே கேம்ப் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா கூறுகையில், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் மற்றும் ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அரசு அதை நிராகரித்தது. இதனை எதிர்த்து ராஜ்கோட்டில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினோம். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. குடியரசு தலைவரிடம் குறிப்பாணை கொடுப்போம் என்று தெரிவித்தோம். அவர்கள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.