×

ஜன் மோர்ச்சா போன்றவை பா.ஜ.க.வுக்கு எதிரான வானவில் கூட்டணியின் தோல்வியடைந்த உதாரணங்கள்... உ.பி. துணை முதல்வர்

 

ஜன் மோர்ச்சா, ஜனதா தளம் மற்றும் தேசிய முன்னணி போன்றவை பா.ஜ.க.வுக்கு எதிரான வானவில் கூட்டணியின் தோல்வியடைந்த உதாரணங்கள் என்று உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இணைந்து ரன் பார் ஜி20 நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு துணை முதல்வர் பிரஜேஷ் பதக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரஜேஷ் பதக் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சி குண்டர்களுக்கும், மாபியாக்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. மாநிலத்திற்கான எந்த வளர்ச்சி திட்டமும் அவர்களிடம் இல்லை. 2017ம் ஆண்டுக்கு முன்பு மாநிலத்தில் மாபியா ஆட்சி இருந்தது. இன்று மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

வரவிருக்கும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு உத்தர பிரதேதச்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும். உத்தர பிரதேசம் முதலீட்டுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. உலகம் முழுவதிலிருந்து முதலீட்டாளர்கள் நம் மாநிலத்துக்கு வருகிறார்கள். சிறந்து முதலீட்டு இடமாக சர்வதேச அளவில் மாநிலம் தனக்கென தனித்துவத்தை அடையாளப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. கடந்த காலத்திலும், நாட்டின் உயர்மட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மூன்றாவது அணிக்காக ஒன்றிணைவதற்கு முயற்சி செய்தனர். 

ஜன் மோர்ச்சா, ஜனதா தளம் மற்றும் தேசிய முன்னணி போன்றவை பா.ஜ.க.வுக்கு எதிரான வானவில் கூட்டணியின் தோல்வியடைந்த உதாரணங்கள். இத்தகைய முயற்சிகளுக்கு பின்னால் இருப்பவர்கள் அதிகாரத்தை பிடிப்பதற்காக மட்டுமே அரசியலில் உள்ளனர். பா.ஜ.க.வை பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியின் தேசம் முதலில் என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப வளர்ச்சியே முதன்மையானது. காஜிபூர் மாவட்டம் வீர் அப்துல் ஹமீதுக்கு சேர்ந்தது. குண்டர்களும், மாபியாக்களும் இங்கு சமாஜ்வாடிகீழ் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் இன்று வளர்ச்சி உள்ளது. 2024ல் காஜிபூரில் தாமரை மலரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.