×

"எலெக்சன் பூத்களை அடிச்சி நொறுக்குவோம்" - பாஜக எம்பி திமிர் பேச்சு.. நடவடிக்கை பாயுமா?

 

சர்ச்சைகளின் நாயகர்கள் என்றால் அது பாஜக தலைவர்கள் தான். எதையாவது ஒன்றை உளறிக்கொட்டி அதனை மிக மோசமாக சமாளிப்பார்கள். நாட்டில் நிலவும் பிரச்சினைகளைக் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் வேறு எதையாவது பேசுவார்கள். சில சமயம் அதிகார திமுருடன் ஆணவத்துடனும் பேசுவார்கள். அவ்வாறு தான் மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவர் பேசியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 108 நகராட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதனையொட்டியே பராக்பூர் பாஜக எம்பி அர்ஜூன் சிங் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியிருக்கிறார். பட்பராவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அர்ஜூன் சிங், "பல ஆண்டுகளாகவே உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு செலுத்தும் பூத்களைக் கைப்பற்றுகிறார்கள். பொதுமக்களை வாக்களிக்க விடுவதில்லை. பூத்களை அபகரித்துக் கொண்டு அடாவடியில் ஈடுபடுகின்றனர். கள்ள ஓட்டும் போடுகிறார்கள். மக்களை மிரட்டி வாக்கு செலுத்த வைக்கிறார்கள்.

ஆகவே அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். வாக்குப் பதிவான இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம். வாக்கு செலுத்தும் மையத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்தால் அதற்கு பொறுப்பான தலைமை தேர்தல் அதிகாரியின் வேலை பறிபோகும்” என்றார். திரிணாமூல் கட்சியை விமர்சிக்கிறேன் என்ற பேரில் பாஜகவுக்கு தன் வாயால் சூனியம் வைத்திருக்கிறார் அர்ஜூன் சிங். இவர் பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனம் செய்யப்படுகிறது.

 

தேர்தல் ஆணையம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் தேர்தலை நேர்மையாக நடத்த மத்திய ரிசர்வ் படைகளை அனுப்ப உத்தரவிட வேண்டும் என பல்வேறு மனுக்கள் பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும் இதுகுறித்து பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.