×

முதலமைச்சர் நேர்மையாக இருந்தாலும் அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் நேர்மையாக இல்லை- அண்ணாமலை

 

பாஜக குறித்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அனைத்து கட்சியினருக்கும் தங்களின் கட்சி தான் முதன்மையானது. மக்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து உழைக்கும் என திருச்சியில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசின் எட்டாண்டு ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக திருச்சியில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என  அதிமுகவின் மூத்த நிர்வாகியும் அமைப்பு செயலாளருமான பொன்னையன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அனைத்து கட்சியினருக்கும் தங்களின் கட்சி தான் முதன்மையானது. மக்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து உழைக்கும். வேகமாக பாஜல வளர்ந்து வருகிறது. திமுக தான் பல பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடுகிறது. சசிகலா அதிமுகவில் சேருவது குறித்து அக்கட்சியின் தலைமை கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க முடியும்.

தனக்கும் கார்த்திக் கோபிநாத்திற்கும் சம்பந்தம் இருப்பது இரண்டு புகைப்படம் மட்டுமே. கட்சிகாரர்கள் , மக்கள் , அனைவரும்  வந்து புகைபடம் எடுத்து செல்கிறார்கள். ஆகையால் சிலர் இதை மிகைப்படுத்தி சொல்கிறார்கள். ஆனால் தேசியவாதிகளை பாஜக ஆதரிக்கும்.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதலமைச்சர் நேர்மையாக இருந்தாலும், அவருக்கு கீழ் பணி புரியக்கூடிய பலர், அரசு  அதிகாரிகளை  நேர்மையாக பணியாற்றவில்லை, தமிழ்நாடு முதல்வர் தனக்கு பதில் சொல்வதைவிட , சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. வருகின்ற 4ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் 2 துறை, 2 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளிப்படையாக வெளியிட உள்ளோம். 

புதிய கல்வி கொள்கை பற்றி அமைச்சர் பொன்முடிக்கு என்ன புரிந்துள்ளது என்பது தனக்கு தெரியவில்லை. புதிய கல்வி கொள்கையை பற்றி தானும் அமைச்சர் பொன்முடி அவர்களும் விவாதிக்க வேண்டும் . அப்போது தான் இதற்கு தெளிவான முடிவு கிடைக்கும்” என்றார்.