×

மரண வியாபாரி முதல் ராவணன் வரை... குஜராத் மற்றும் அதன் மகனை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது.. பா.ஜ.க. குற்றச்சாட்டு

 

மோடிக்கு 100 தலைகள் உள்ளதா என்று பிரதமரை மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம் செய்ததற்கு, மரண வியாபாரி முதல் ராவணன் வரை குஜராத்தையும் மற்றும் அதன் மகனையும் (மோடி) காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், மோடி ஜி பிரதமர். அவர் தனது வேலையை மறந்து மாநகராட்சி தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் மற்றும் எம்.பி. தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார். எந்நேரமும் தன்னை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை பார்த்து ஒட்டு போடுங்கள் என்று சொல்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனை போல 100 தலைகள் உள்ளதா? என தெரிவித்தார்.

இதற்கு பா.ஜ.க. குஜராத் மகனை மல்லிகார்ஜூன் கார்கே தொடர்ந்து அவமதிக்கிறார் என்று குற்றம் சாட்டியது. பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மல்லிகார்ஜூன் கார்கே பேசிய வீடியோவை ஷேர் செய்து, குஜராத் தேர்தல் சூட்டை தாங்க முடியாமல், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று அழைக்கிறார்.  மரண வியாபாரி முதல் ராவணன் வரை,   குஜராத்தையும் மற்றும் அதன் மகனையும் (மோடி) காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. என பதிவு செய்துள்ளார்.

2007 குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது, சோனியா காந்தி அங்கு பிரச்சாரம் செய்கையில், 2002 குஜராத் கலவரத்தை குறிப்பிட்டு மோடியை மரண வியாபாரி என்று குறிப்பிட்டார். அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சோனியா காந்தி பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததைதான், அமித் மால்வியாவின் டிவிட்டில் இடம் பெற்றுள்ள மரண வியாபாரி என்ற வார்த்தை  குறிப்பிடுகிறது.