×

பீகாரை போல் உத்தர பிரதேசத்திலும் பா.ஜ.க.வை விட்டு கூட்டணி கட்சிகள் வெளியேறும்.. அகிலேஷ் யாதவ் உறுதி

 

பீகாரை போல் உத்தர பிரதேசத்திலும் பா.ஜ.க.வை விட்டு அதன் கூட்டணி கட்சிகள் வெளியேறும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது: தேர்தல் ஆணையம் நிறைய நேர்மையற்ற செயல்களை செய்தது. அது எதிர்ப்பு குரல்களை கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்குகள் நீக்கப்பட்டன. ராம்பூரில் சமாஜ்வாடிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை, அசம்கரில் சமாஜ்வாடி கட்சியினருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தூங்கி கொண்டிருந்ததா? எங்கள் புகார்களுக்கு அது செவிசாய்க்கவில்லை. 

பீகார் நிகழ்வு (நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, மெகா கூட்டணி ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்தது) நாட்டின் அரசியலுக்கு நேர்மறையான அறிகுறியாகும். அரசியல் கூட்டாளிகள் பா.ஜ.க.வுடன் மகிழ்ச்சியாக இல்லை. உத்தர பிரதேசத்தில் அவர்கள் (பா.ஜ.க. கூட்டணி கட்சிகள்) என்ன பெறுகிறார்கள் என்பதை பாருங்கள். ஒரு நாள் அவர்களும் அவர்களை (பா.ஜ.க.) விட்டு ஒடிவிடுவார்கள். உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் சமாஜ்வாடி கவனம் செலுத்துகிறது. 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அரசியல் மாற்று உருவாகும். 

மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் அத்தகைய மாற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் தடுப்பூசி எண்கள் போலி. மருந்தும் இல்லை, சிகிச்சையும் இல்லை, அறுவை சிகிச்சையும் இல்லை. எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. அல்லது சி.டி. ஸ்கேன் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் செயலற்று போய்விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.