×

ஓபிஎஸ், சசிகலாவை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கவில்லை- ஜெயக்குமார்

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், அதில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ்க்கு இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பட்டினமப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பாஜகவை பொறுத்தவரை ஒரு தேசியக் கட்சி மற்றும் ஒரு தோழமைக் கட்சி.  அதுமட்டுமின்றி அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியில் எந்த நிலையிலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு இடம் இல்லை.நாமக்கல் மற்றும் சீர்காழி கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் இது தொடர்பாக தெளிவுபடுத்தி இருக்கிறார். போதை பொருளை எளிதாக கடத்துதல், கோவை குண்டு வெடிப்பு,மருத்துவமனையில் மருந்துகள் இன்மை என பல விசயங்களில் மக்கள் விரோத செயல்கள் திமுக ஆட்சியில்  நடந்து  வருகிறது.


திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களில் எங்கும் எதிலும் ஊழல் நடைபெறுகிறது. ஆளுநர் உடனான சந்திப்பு என்பது அரசியலுக்கானதல்ல, திமுகவில் நடைபெற்று வரும் குற்றங்களை ஆளுநரிடம் எடுத்து வைப்பதற்குதான் ஆளுநரை சந்தித்தோம். நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தின் மூலம் ஒரு பேனரை அடித்து அதில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஜனநாயக விரோதபோக்கை கண்டித்து நடவடிக்கை எடுங்கள் என்றே ஆளுநரை சந்தித்து கூறினோம். பாஜகவுடன் எங்களுக்கு சுமூக உறவே உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒ.பி.எஸ் மற்றும் சசிகலாவையோ கட்சியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நீக்கினார்கள். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைய வாய்ப்பே இல்லை  அதற்கு அதிமுக பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது இதுவரை பிரதமர் மோடியோ அமித்ஷாவோ இருவரும் ஒன்று சேர்வது தொடர்பாக பேசியது இல்லை, இனிமேலும் அப்படி நடக்காது” என்று தெரிவித்தார்.