×

கிசுகிசு மன்னன், குரங்கு கையில பூ மாலை : அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம்

 

பதவி பறிபோனதால் கிசுகிசு மன்னன், குரங்கு கையில பூ மாலை என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை வந்தது முதல் அக்கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராமுக்கும்  அவருக்கும் இடையே மோதல் தொடங்கி விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர்.   அதற்கு  முந்தைய தலைமையில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம் அண்ணாமலையின் தலைமையின் கீழ் இயங்குவதை விரும்பாமலேயே இருந்திருக்கிறார். 

 இதனால் தலைமையிடம் எதுவும் சொல்லாமல் தனது அமைப்பின் கீழ் இருந்தவர்களிடம் தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததை அடுத்து அந்த பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார் அண்ணாமலை.   இதன் பின்னர் அவருக்கு வேறொரு பொறுப்பு வழங்கினார்.  அதன் பின்னரும் அண்ணாமலையையும் அவரின் ஆதரவாளர்களையும் மறைமுகமாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம் . 

இது அண்ணாமலைக்கு கடும் எரிச்சலை தந்து வந்திருக்கிறது.   இந்த நிலையில் தானாக சென்று சிக்கிருக்கிறார் காயத்ரி.   திருச்சி சூர்யா சிவா- டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தில் தலைமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.   இதனால் கடுப்பான அண்ணாமலை காயத்ரி ரகுராமை ஆறு மாதம் கட்சியை விட்டு நீக்கம் செய்தார்.   6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அந்த பொறுப்பு தனக்கு வரும் என்று எதிர்பார்த்து இருந்தார் காயத்ரி.   ஆனால் அந்த பொறுப்பை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கிவிட்டார் அண்ணாமலை . இது மேலும் காயத்ரியை ஆத்திரப்படுத்த தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் புலம்பி வருகிறார்.

 இதன் பின்னர் அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.   ‘’அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு எதிராக கடிதம் எழுதுவது சரி. பெண்களை தவறாக பேசுவதும் சரி. ராஜினாமா ஏற்கப்படவில்லை.   ஆனால் வார் ரூம் ட்ரோல்கள் மோசமான வார்த்தைகளுக்கு எதிராக பதிலளித்ததற்காக அவசரமாக ஒரு பெண்ணை இடைநீக்கம் உடனடியாக பதவியை வேறு ஒருவருக்கு கொடுப்பது சரியா?  ஆடியோவை லீக் செய்தது யார் என்பதும் தெரியும். அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையையும் நோக்கத்தையும் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது’’என்று கேட்டு வந்தார்.

இன்று,  ‘’ஒரு பெண்ணின் முன் பேசுவதற்கு தைரியம் இல்லை, ஆனால் 150 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுவது ஒரு மோசமான தரம். அவர் ஆண் அழகு என்று அழைக்கப்படுவதில்லை, கிசுகிசு மன்னன் என்று அழைக்கப்படுகிறார். 'குரங்கு கையில பூ மாலை'.  மோசமான நிலை’’ என்று விமர்சித்துள்ளார். அவர் அண்ணாமலையைத்தான் தாக்கி பேசுகிறார் என்று  கட்சியினர் சொல்லி வருகின்றனர்.