×

7.5 % உள்இடஒதுக்கீடு விவகாரம் – ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள் !

நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதனால் அரசு பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று ஒருபுறம் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. மறுபுறம் ஆளும் அதிமுக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. இதற்கு நீதிமன்றத்தை காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு உறுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க
 

நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதனால் அரசு பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது.

நீட் தேர்வு வேண்டாம் என்று ஒருபுறம் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. மறுபுறம் ஆளும் அதிமுக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. இதற்கு நீதிமன்றத்தை காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு உறுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில், தமிழக அரசு கடந்த 15-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இன்று வரை அமைதி காத்து வருகிறார்.

இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

இதனிடையே, ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திராமல், அரசாணை வெளியிட்டு ஜெயலலிதா பாணியில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அரசு சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் இந்த பிரச்சனை தேர்தல் அரசியலை நோக்கி சென்றுள்ளது என்றே கூறப்படுகிறது. இது தேர்தல் காலம் என்பதால், மிகுந்த கவனத்தோடு செயல்படும் அதிமுக அரசு, எப்படியாவது, இந்த ஆண்டு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தி விட வேண்டும் என ஆவலோடு காத்திருக்கிறது.

இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால், அதன் பலனை அரசியல் ரீதியாக அறுவடை செய்யும் வாய்ப்பு அதிமுகவுக்கு உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் பெற்றுத் தந்தோம் என மக்களை சந்திக்க முடியும் என அந்த கட்சி கணக்கு போடுவதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காமல் போனது குறித்து மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள நெகட்டிவ் எண்ணங்கள் , இதன் மூலம் மறக்கடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை ஆளுநர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அனுமதி அளித்தால், அதை முன்வைத்து பாஜக தரப்பிலும் அரசியல் ஆதாயம் பெற தயராக உள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. உள் இட ஒதுக்கீடு விவகாரம் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தேர்தல் நேரம் என்பதால், அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது என்றே மக்கள் சொல்கின்றனர்.