×

‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதையடுத்து நடக்க உள்ள நிகழ்வுகள் எதிர்முகாமுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் பார்வையாளர்கள் இந்த பயணத்தை உன்னிப்பாக கவனிக்கின்றனர். இது தொடர்பாக சிலரிடம் பேசுகையில், அ.தி.மு.க வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி
 

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதையடுத்து நடக்க உள்ள நிகழ்வுகள் எதிர்முகாமுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் பார்வையாளர்கள் இந்த பயணத்தை உன்னிப்பாக கவனிக்கின்றனர். இது தொடர்பாக சிலரிடம் பேசுகையில்,

அ.தி.மு.க வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கணக்கு போட்டிருந்தன. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை முறியடிக்கும் விதமாக, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இருப்பினும் தமிழக பாஜக தலைவர்கள் சிலர் இது குறித்து எதிர்மறையாக பேசி வந்த நிலையில், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்த எடப்பாடி, அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி மூலம், அதிமுக பிரசார தொடக்கக் கூட்டத்திலேயே அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுக தலைமை அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.


இந்த மாதம் 9 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி இந்த அளவுக்கு எகிறி அடிப்பார் என பாஜக எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் முருகன் அவசர அவசரமாக கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி சூட்டை தணித்தார். பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியும் ’அதிமுகதான் எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி நாங்கள் சின்ன கட்சிதான். எனவே முதல்வர் வேட்பாளரை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்’ என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அவரது இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து திமுக முகாம் ஆடிப் போயிருக்கிறது என்றே சொல்லலாம். கட்சியிலும், ஆட்சியிலும் அதிகரித்த எடப்பாடியின் ஆளுமை, தமிழக மக்களிடையே அவரது செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசும் அவர், தமிழக அரசியல் சூழ்நிலை, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால்தான், நேரடியாக அக்கட்சித் தலைமையுடனேயே பேசி விடுவது என்ற முடிவில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்கிறார்கள். வழக்கம்போல் இதையும் வெற்றிகரமாக சாதித்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி என அதிமுகவினர் உற்சாகமாக பேசிக் கொள்கிறார்கள்.