×

அம்மியில மசாலா அரைக்கிற மாதிரி வச்சி அரைச்சி விட்டுட வேண்டியதுதான்… சீமான்

அம்மியில மசாலா அரைக்கிற மாதிரி வச்சி அரைச்சி விட்டுட வேண்டியதுதான் என்று பாஜக மீது ஆவேசத்தை காட்டினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-12-2020 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய பறையிசையாட்டத்துடன் தொடங்கியஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சீக்கிய எழுத்தாளர், அரசியலறிஞர் அஜய்பால்
 

அம்மியில மசாலா அரைக்கிற மாதிரி வச்சி அரைச்சி விட்டுட வேண்டியதுதான் என்று பாஜக மீது ஆவேசத்தை காட்டினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-12-2020 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

தமிழர் பாரம்பரிய பறையிசையாட்டத்துடன் தொடங்கியஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சீக்கிய எழுத்தாளர், அரசியலறிஞர் அஜய்பால் சிங் பிரார் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து புறப்பட்ட சீமானை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், வேண்டுமென்றே வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற குற்றம்சாட்டுகிறதே பாஜக? எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்களே? என்ற கேள்விக்கு,
‘’என்ன சட்டம் கொண்டுவந்தாலும் எதிர்க்கிறார்கள் என்கிறார்கள். நாங்கள் எதிர்க்கின்ற மாதிரியே எல்லா சட்டங்களையும் கொண்டு வந்தால் என்ன செய்வது? புடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணியாக இருந்தால் என்னதான் பண்ணுறது?’’என்று திருப்பிக்கேட்டார்.

பின்னர், ‘’வேளாண் சட்டங்களில் நாங்கள் திருத்தம் செய்ய சொல்லச்சொல்லி போராடவில்லை. அந்த சட்டத்தையே திரும்ப பெற வேண்டும் என்றுதான் போராடுகிறோம். திரும்ப பெற்றே ஆகவேண்டும். இல்லை என்றால், தேர்தலில் அம்மியில மசாலா அரைக்கிற மாதிரி வச்சி அரைச்சி விட்டுட வேண்டியதுதான்’’என்று சொன்னவர்,

’’நான் வேளாண் சட்டத்தை வரிக்கு வரி படித்துவிட்டேன். அதில் பேராபத்து இருக்கிறது. மொத்தமாக நல்ல சட்டம் என்று சொல்லக்கூடாது. மம்தா பானர்ஜி போல் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சொல்ல வேண்டும். நல்ல சட்டம் என்றால் பொதுவாக சொல்லக்கூடாது. ஒரு மேடை போட்டு அவர் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்ல வேண்டும். கூட்டணி வச்சிட்டோம்கிறதுக்காக எதுக்கெடுத்தாலும் மண்டையை ஆட்டக்கூடாது பூம்பூம் மாடு மாதிரி.’’என்றார்.

விவசாயிகள் யாரும் போராடவில்லை. விவசாயிகள் அல்லாதோர்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்களே? என்றதும், ‘’நானும் வேளாண்குடிதான். நான் என்ன விஞ்ஞானியா?’’என்று திருப்பி கேட்டார்.