☰
×

தேனியில் ஓபிஎஸ்ஸுக்கு பேரிடி! ஆயிரம் பேர் அதிமுகவில் ஐக்கியம்

 

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-ன் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களாக அறியப்பட்ட செல்லமுத்து, ராதா, ராஜகோபால், கம்பம் ஜெகதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஆயிரம் பேருக்கு மேல் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது ஓபிஎஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தென் மாவட்டம் என்றாலே அதிமுகவின் கோட்டை. ஆனால் இப்போது அந்த கோட்டையே சரிந்து வருகிறது. தென் மாவட்டத்தில் அதிமுகவுக்கு இருந்த செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. இதனால் தான் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தையும், சசிகலாவையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியை வளர்க்கும் எண்ணம் இல்லை என்ற குற்றச்சாட்டு தொண்டர்கள் மத்தியில் வலுவாக உள்ளது. சசி, ஓபிஎஸ் இல்லாமல் தென் மாவட்டத்தில் காலூன்ற முடியாது என்பது தான் நிதர்சனம்.

இன்னொரு பக்கம் திமுகவில் ஓபிஎஸ்-க்கு எந்த பதவியும் வழங்காத நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற அதிருப்தி வெடித்துள்ளது. குறிப்பாக தேனி திமுகவில் தங்கம் தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ஓரம் கட்டி வருவதாகவும், முக்கியத்துவம் தருவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த இரட்டை புறக்கணிப்பு தான் அவர்களை மீண்டும் அதிமுகவை நோக்கி தள்ளியுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் தனது மகனை நிறுத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் நகரும் வேளையில், சொந்த மாவட்டத்திலேயே ஆதரவாளர்கள் விலகுவது ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.