×

"துரைமுருகன் அதிகார திமிரில் ஆணவ பேச்சு".. மன்னிப்பு கேட்க வேண்டும் - எழும் எதிர்ப்பு!

 

அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரத்தின்போது யாராவது ஒருவர் சர்ச்சையாக பேசுவார். அது தேர்தல் களத்தை அனல் பறக்க வைக்கும். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அப்படியான எதுவும் அரங்கேறவில்லை. ஆனால் அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறார் நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன். துரைமுருகன் பிரச்சாரம் என்றாலே கலகலப்பாக இருக்கும். நகைச்சுவையாக எதாவது பேசி கூட்டத்தை தன் பக்கம் இழுத்துவிடுவார். அவர் பிரச்சாரத்தில் எப்போதுமே நக்கல் நெடி சற்று தூக்கலாகவே இருக்கும்.

இதெல்லாம் அவரின் பாசிட்டிவ் பக்கங்கள். நெகட்டிவ் பக்களும் உள்ளன. அவ்வப்போது பிறர் முகம் சுளிக்கும் வகையில் எதாவது பேசிவிடுவார். அப்படி தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். இப்போது தனது சொந்த தொகுதியான வேலூரிலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சி வேட்பாளர்களை நக்கல் செய்வதும் மிரட்டல் விடுப்பதும் தான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. வாணியம்பாடியில்  நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் துரைமுருகன்.

அப்போது பேசிய அவர் திமுக வேட்பாளரை கவுன்சிலராக்கினால் வாணியம்பாடி நகரத்திற்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும். மாறாக அவர்களை தோற்கடித்துவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த  5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. வாக்கு செலுத்தாதவர்களுக்கும் பாகுபாடு பார்க்காமல் திட்டங்களைச் செயல்படுத்துவது அதன் கடமை. ஆனால் புறக்கணிப்பதாக துரைமுருகன் பேசியிருப்பது அதிகார திமிர் என எதிர்க்கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான பாபுமுருகவேல் தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளார். மேலும் இதுகுறித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவரது வீடு முற்றுகையிடப்படும். திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் ஆணவ பேச்சு தொடர்வதை உடனே நிறுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம். 

ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் திமுகவை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை பார்த்து ' ஏ தொப்பி ' என அழைத்து கேவலமான சிரித்தது உட்பட அடிக்கடி முஸ்லிம்களை சீண்டி பார்ப்பது தொடர் கதையாகி வருகிறது. இப்போது திமுக வெற்றி பெறாவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த  5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரித்துள்ளர். இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனே தலையிட்டு பிரச்சினையைக் களைய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றாலும் அங்கு வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை அச்சமூட்டும் வகையில் பேசியதை உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.