×

44 பேர் கொல்லப்பட்டதைப் பதிவு செய்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் மரணம்

கொரோனா காலத்தில் ஆளுமைகள் பலரையும் நாம் இழந்து வருகிறோம். குறிப்பாக எழுத்தாளர்கள் பலர் இந்த இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் மரணம் அடைந்துள்ளனர். மிகச் சமீபத்தில் உதாரணம் என்றால் பேராசிரியர் தொ.பரமசிவம் மற்றும் கவிஞர் இளவேனில். இன்று திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் மரணம் அடைந்துவிட்டார். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் எனும் சிறிய கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சோலை சுந்தரபெருமாள். தஞ்சாவூர் பகுதி எழுத்தாளர்கள் அடித்தட்டு மக்கள் பற்றி அதிகம் எழுதியதில்லை என்ற குற்றசாட்டு எப்போதும் உண்டு.
 

கொரோனா காலத்தில் ஆளுமைகள் பலரையும் நாம் இழந்து வருகிறோம். குறிப்பாக எழுத்தாளர்கள் பலர் இந்த இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் மரணம் அடைந்துள்ளனர். மிகச் சமீபத்தில் உதாரணம் என்றால் பேராசிரியர் தொ.பரமசிவம் மற்றும் கவிஞர் இளவேனில்.

இன்று திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் மரணம் அடைந்துவிட்டார். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் எனும் சிறிய கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சோலை சுந்தரபெருமாள்.

தஞ்சாவூர் பகுதி எழுத்தாளர்கள் அடித்தட்டு மக்கள் பற்றி அதிகம் எழுதியதில்லை என்ற குற்றசாட்டு எப்போதும் உண்டு. அதைத் தகர்த்தவர் சோலை சுந்தரபெருமாள். நாகப்பட்டினம் அருகே கீழ்வெண்மணி எனும் ஊரில் 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வு கேட்டதற்காகவும் இடதுசாரி தொழிற்சங்கம் அமைத்ததற்காகவும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்களை தாக்க வந்தனர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் தலைமையிலான கும்பல். தப்பித்தால் போதும் என ராமையா என்பவரின் குடிசைக்குள் ஒளிந்துகொண்டனர் பெண்களும் முதியவர்களும். சுமார் 50 பேர் அந்தச் சின்னக் குடிசைக்குள் ஒளிந்துக்கொண்டார்கள்.

வன்முறை குடிகொண்ட நெஞ்சம் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் அந்தக் குடிசையை கொளுத்தினார். அதில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவம் பலரையும் உலுக்கியது. அதை கலை படைப்பாக மாற்றியவர் எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள். செந்நெல் எனும் பெயரில் வெண்மணியில் நடந்த கொடுமையை நாவலாக எழுதியவர். இந்த நாவல் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்டது.

இந்த நாவல் மட்டுமல்லாது வெண்மணியிலிருந்து வாய் மொழி வரலாறு எனும் நூலில் நேரடி மனிதர்களின் சாட்சிகளையும் பதிவு செய்திருந்தார். அதன்பின், எல்லை பிடாரி, தாண்டவபுரம் என பல நூல்களை எழுதியவர். எந்தப் படைப்புமே வண்டல் மக்களின் வியர்வையை வார்த்தெடுத்தவையாக இருக்கும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் தொடக்கம் முதலே ஆர்வத்துடன் பங்கெடுத்து பணியாற்றியவர்.

சமீப நாட்களாக உடல்நலிவுற்று இருந்த சோலை சுந்தரபெருமாள். இன்று காலை மரணமடைந்தார். அவரின் இழப்பு முற்போக்கு இலக்கியத்திற்கு பேரிழப்பு என சக எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சமூக ஊடகத்தில் பலரும் அவருடனான நட்பை பற்றி பதிவிட்டு வருதத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.