சுய இன்பம்… சந்தேகங்களும் உண்மைகளும்!
ஆண், பெண் என இருபாலருக்கும் சுய இன்பம் என்பது மிகவும் பாதுகாப்பான, தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கும், பாலியல் நலத்தை அதிகரிக்கச் செய்யும் விஷயம் ஆகும். இப்போது வரையிலும் சுய இன்பம் என்பது தவறானது, பாவச் செயல் என்று நம்முடைய மதங்கள் கற்பிக்கின்றன.
மருத்துவ ரீதியாக பார்க்கும்போது இது நல்லதாகவே பார்க்கப்படுகிறது. தாம்பத்தியம், பாலியல் தேவை என்பது குழந்தைப் பேற்றை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று மதங்கள் கூறுகின்றன. ஆனால், சுய இன்பத்தில் இந்த இனப்பெருக்க குறிக்கோள் தவிர்க்கப்படுகிறது என்பதால் இயற்கைக்கு மாறானது என்று பலரும் நம்புகின்றனர்.
உண்மையில் சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பது ஒரு நபர் எவ்வளவு சுய இன்பம் மேற்கொள்கின்றார் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது என்று பாலியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். சுய இன்பத்தால் எதிர் பாலினம் பாதிக்கப்படுவது இல்லை. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தில் நாட்டம் கொள்வது தாம்பத்திய வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். தம்பதிகள் இடையேயான சுமுக உறவைப் பாதித்து, உறவு முறிவுக்குக் கூட சுய இன்பம் வழிவகுத்துவிடலாம்.
சுய இன்பம் என்பது பாலியல் வாழ்க்கையில் ஒரு அங்கம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை, தொடர்ந்து சுய இன்பத்தில் மகிழ்ச்சி கொள்கிறார்கள், உண்மையான தாம்பத்தியத்தை விட சுய இன்பமே சிறந்தது என்று கருதுகிறார்கள் என்றால் அது தவறான போக்காகும். இப்படி அதீத அளவில் சுய இன்பத்தில் மூழ்குவது ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைபாடு, குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
அளவுக்கு மீறாத வரை சுய இன்பம் பாதிப்பு இல்லை என்றே நவீன மருத்துவம் கூறுகிறது. சுய இன்பம் செய்தால் அன்றாட வாழ்க்கைப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தால், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல், குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு இருந்தால் அது மிகவும் பாதிப்பானதுதான்.
அதே நேரத்தில் சுய இன்பம் மேற்கொள்வதின் மூலம் சில நன்மைகளும் உள்ளது. முக்கியமாக இரண்டாவது நபர் பாதிக்கப்படுவது இல்லை. மன அழுத்தம் நீங்குகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் வருகிறது. மனம் அமைதி அடைகிறது. அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. பாலியல் தேவை, வேட்கை தவிர்க்கப்படுகிறது. முறையற்ற உடலுறவு மூலம் பாலியல் தொற்று நோய்கள் ஏற்படுவது இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.