கிட்னியை கண்ணுக்குள் வைத்து காத்து ,ஒழுங்கா ஒண்ணுக்கு போக செய்யும் நன்னாரி -இப்படி சாப்பிடுங்க
இன்னும் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறையவில்லை! இத்தருணத்தில் உடலுக்குக் குளிர்ச்சி தருவது மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நன்னாரி வேர் பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாயிருக்கும்.
தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும், தானே வளரும் ஒரு கொடி வகை மருத்துவ மூலிகைத் தாவரம், கிருஷ்ணவல்லி, பாதாள மூலி எனும் பெயரில் அழைக்கப்படும் நன்னாரி. எதிர் எதிர் அடுக்குகளில் நீண்டு காணப்படும் இலைகளுடன் பசுமை நிற மலர்களைக் கொண்டு, மெலிதான தண்டுப் பகுதியுடன்தோன்றினாலும், நன்னாரி வேர் அதிக உறுதி மிக்கது, நறுமண மிக்க நன்னாரி வேரே, நன்னாரியின் சிறப்புக்கு முக்கிய காரணமாகிறது.
நன்னாரி வேரைப் பொடியாக்கி, அதை பாலில் சிறிது சேர்த்து கலக்கி பருகி வர, சிறுநீர் பிரியாமல் வேதனை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் வறட்டு இருமல் தொல்லை விலகும். இதையே தொடர்ந்து சில நாட்கள் பருகி வர, இள நரை பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளரும்.
நன்னாரி மணப்பாகு என்பது… நன்னாரி வேரை இடித்தெடுத்து அதனை வெந்நீரில் ஊறவைத்து, பின் வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய நெருப்பில் சூடுசெய்து, 1 முதல் 2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்தால் அதுவே நன்னாரி மணப்பாகு.
நன்னாரி மணப்பாகு அருந்தினால் உடல் உஷ்ணம், சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர் சுருங்கி வெளியேறுவது போன்ற வெப்ப நோய்கள் தீரும். நன்னாரி வேர், இலை, கொடி, காய், பூ ஆகியவற்றை நெய்யில் வதக்கி சிறுபுளி, மிளகு, உப்பு சேர்த்து வறுத்து துவையல் செய்யலாம். அல்லது அதனை வடகம் போல செய்து முறைப்படி 1 மண்டலம் வரைக்கும் பத்தியத்தோடு உண்டு வர பெண்களுக்கு பித்தத்தால் ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாவதோடு, அக்குள் நாற்றம் மற்றும் உடல் வேர்வை துர்நாற்றம் தீரும்.
பொதுவாக பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் கோடையில் தாகத்தை தணிக்கக் கூடியதாகவும் உள்ள நன்னாரி, சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து 30 மிலி வீதம் இரு வேளை குடித்து வர, செரியாமை மற்றும் வாத நோய்கள் நீங்கும். இந்நீரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பனங்கற்கண்டு கலந்து அருந்தக் கொடுக்கலாம். நன்னாரி வேரை குடிநீரிலிட்டு சூடாக குடித்து வர ஆண்மை பெருகும். நன்னாரி வேரைப் பொடி செய்து பசும்பாலில் கலந்தோ அல்லது சீரகம் சேர்த்த குடிநீரில் சேர்த்தோ குடித்தால் சிறுநீர் சுருங்கி வருவது (அளவு குறைவது & சொட்டுச் சொட்டாக இறங்குவது) குணமாகும். மேலும், இதனை சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறுவதை குணப்படுத்துவதற்காகவும் அருந்தலாம். நன்னாரி வேர்ச்சாற்றினை கண்களில் விட கண்கள் குளிர்ச்சி பெறும்.
கோடைக் காலங்களில், வெயிலில் செல்லவேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு, வெயிலில் உடலில் உள்ள சத்துக்கள் வற்றி, தாகம் ஏற்படும். தாகத்தைத்தணிக்க, கண்களைக் கவரும் விதத்தில் டிசைன் செய்யப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு, குளிர்ச்சியாக்கி விற்கப்படும் பன்னாட்டு செயற்கை பானங்களைப் பருகி, உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், வீதிகளில், எளிமையான இயற்கை நன்னாரி சர்பத் விற்கும் கடைகளுக்குச் சென்று, எலுமிச்சை சாறு பிழிந்த, சர்க்கரைப்பாகில் சேர்ந்த நன்னாரி சர்பத்தை குளிராகவோ, சாதாரண வெப்ப நிலையிலோ பருகி வர, தாகத்தை தீர்த்து, உடலுக்கு குளிர்ச்சியைத்தரும், உடலின் பித்த வாத கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் மிக்க, நன்னாரி பானம், சிறுநீரை, சீராக வெளியேற்றும் தன்மைமிக்கது.