இன்சுலின் இன்ஜெக்ஷன்… எங்கு, எப்படி… அடிப்படை அறிவோம்!
நம்முடைய கணையத்தில் உள்ள லாங்கர் ஹான்ஸ் திட்டுக்கள் என்ற பகுதியில் சுரக்கும் ஹார்மோன் தான் இன்சுலின். இது நம்முடைய உடலில் உள்ள செல்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த சாவி போன்று செயல்படுகிறது. இன்சுலின் என்ற சாவி சரியாக செயல்பட்டால்தான் செல்கள் உள்ள பூட்டு திறக்கும். குளுக்கோஸ் செல்களுக்குள் செல்லும். சாவி சரியாக செயல்படவில்லை, போதுமான அளவில் இல்லை என்றால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்துவிடுகிறது. இதைத் தான் சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பதே இல்லை. இவர்கள் செயற்கை இன்சுலினை ஊசி வடிவில் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். டைப் 2 சர்க்கரை நோய் என்றால் இன்சுலின் சுரப்பு இருக்கும். அது குறைவாக சுரக்கலாம் அல்லது அதிக ஆற்றலுடன் இல்லாமல் இருக்கலாம்.
சர்க்கரை நோயை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இவற்றுடன் மாத்திரை மருந்து, தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வதுடன் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையிலேயே இன்சுலின் எடுக்க பரிந்துரைப்பது இல்லை. மாத்திரை மருந்து மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத சூழலில் இன்சுலின் பரிந்துரைக்கப்படும்.
இன்சுலினை செலுத்த பெரும்பாலும் ஊசி முறையே பயன்படுத்தப்படுகிறது. டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் பம்ப் என்று உள்ளது. அதுவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பை உணர்ந்து இன்சுலினை செலுத்திக்கொள்ளும். இது தவிர இன்சுலின் பென், ஜெட் இன்ஜெக்ஷன் என்று வேறு சில வழிமுறைகளும் உள்ளன.
இன்சுலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை சர்க்கரை நோய் என்பது மிகவும் கொடுமையான வியாதியாகக் கருதப்பட்டது. சர்க்கரை நோய் வந்தால் சில வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையில் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை இருந்தது. அதற்குள்ளாக உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நிகழும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலின் கண்டறியப்பட்ட பிறகு மனிதர்களின் வாழும் நாட்கள் அதிகரித்துவிட்டது.
இன்சுலின் செலுத்த மிகச் சிறந்த இடம் என்றால் அது வயிறுதான். வயிற்றில் செலுத்தும் போது அது மிக விரைவாக ரத்தத்தில் கலந்து செயல்பட ஆரம்பிக்கும். தொப்புளுக்கு அருகாமையில் இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் ஊசி போட்ட தழும்பு, புள்ளிகள் போன்றவை வெளியே தெரியாமல் தடுக்கலாம்.
இன்றைக்கு பெரும்பாலும் கையில் புஜம் பகுதியில் போட்டுக்கொள்கின்றனர். இன்சுலினை தொடைப் பகுதியிலும் போட்டுக்கொள்ளலாம். மற்ற ஊசி போல இடுப்பு பகுதியில் இன்சுலின் போடக் கூடாது. ஏனெனில் கை, தொடை, வயிற்றுப் பகுதியில் சருமத்துக்கு கீழ் கொழுப்பு படிவம் இருக்கும். இந்த பகுதிகளில் தான் இன்சுலின் போட வேண்டும். தசைப் பகுதியில் இன்சுலின் போட்டால் அது மிக விரைவாக செயல்பட்டு வீணாகிவிடும். மேலும் வலி மிகுந்ததாக இருக்கும். குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தும் நோக்கம் பாதிக்கப்படும்.