வயாகரா இதுக்கு கூட நல்லதாம்... புது ஆராய்ச்சி தகவல்!
வயாகரா மாத்திரை என்றாலே ஆண்களின் விரைப்புத் தன்மை பிரச்னையை சரி செய்யும் மாத்திரை என்று எல்லோருக்குமே தெரியும். பலரும் இதை மிகவும் அற்புத மாத்திரையாகவே பார்க்கின்றனர். இந்த மாத்திரை அல்சைமர் நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜர்னல் நேச்சுரல் ஏஜிங் என்ற மருத்துவ இதழில் இது தொடர்பாக ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்த மாத்திரை எடுத்துக் கொண்டவர்களில் 69 சதவிகிதம் பேருக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அல்சைமர் என்பது மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் நோயாகும். இதனால் மறதி நோய் ஏற்படும். கடைசியில் குடும்பத்தினர் கூட யார் என்று தெரியாத அளவுக்கு மறதி வந்துவிடும். பேசுவது, மொழி, உணவு உட்கொள்வது என அனைத்தும் மறந்துவிடும் கொடிய நோய் ஆகும். இந்த நோய் வந்தால் அதற்கு சிகிச்சை இல்லை.
இந்த சூழலில் அல்சைமர் நோய் வராமல் தடுக்க வழிமுறை ஏதும் உள்ளதா என்று உலக அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினீக்கல் குழு 70 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளின் மருத்துவ தரவுகளைப் பகுப்பாய்வு செய்தது. மொத்தம் 1600 வகையான அமெரிக்கானவின் எஃப்.டி.ஏ அங்கீகாரம் பெற்ற மருந்துகளை எடுத்து வரும் இந்த நோயாளிகளுக்கு அல்சைமர் வருவதற்கான வாய்ப்பு அந்த அளவுக்கு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளவர்களின் மூளையில் இரண்டு மாற்றங்கள் நிகழ்வதை ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, 1600 மருந்துகளில் எது மூளையில் ஏற்படும் மாற்றத்தைக் குறைக்கிறது என்று ஆய்வு செய்து, ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் இந்த மாற்றங்கள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த மாத்திரை எடுத்துக்கொள்பவர்களை ஆய்வு செய்தனர். இதில் 63 சதவிகிதம் அளவுக்கு அல்சைமர் வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு குறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வது அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பை மட்டும் இன்றி, இதய ரத்த நாள அடைப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைப்பதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.