×

“ஆரோக்கியமான கிரகத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்தல்”-இதுதான் 2020 தீம்

ஆரோக்கியமான கிரகத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்க வேண்டும் (World Breastfeeding Week 2020 is “Support breastfeeding for a healthier planet) என்பதுதான் 2020ஆம் ஆண்டின் தாய்ப்பால் வாரத்திற்கான யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கும் தீம்(theme). தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் -7 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு உலகம் எங்கும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் உலக
 

ரோக்கியமான கிரகத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்க வேண்டும் (World Breastfeeding Week 2020 is “Support breastfeeding for a healthier planet) என்பதுதான் 2020ஆம் ஆண்டின் தாய்ப்பால் வாரத்திற்கான யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கும் தீம்(theme).

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் -7 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு உலகம் எங்கும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் உலக தாய்ப்பால் வாரம் (WBW) கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை((theme)மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான கருப்பொருள்தான், ’ஆரோக்கியமான கிரகத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்தல்’.

தாய்ப்பால் கொடுப்பதை உலகம் முழுவதும் இந்த அளவிற்கு ஏன் ஒரு பிரச்சாரமாக முன்னெடுத்துச்செல்லப்படுகிறது? என்ற கேள்வியை மகப்பேறு மருத்துவத்துறை சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் டாக்டர் அமுதாஹரி முன்வைத்தேன்.

’’தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல ஒரு கிரகத்தின் ஆரோக்கியத்திற்கே நல்லது. குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறுமாதம் தாய்ப்பால் கொடுத்தே ஆகவேண்டும்.

ஒரு வருடம் கொடுத்தால் நல்லது. 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும் அக்குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், சில பெண்கள் தங்களுடைய அழகு குறைந்துவிடும், மார்பகங்கள் சரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு இருக்கும் நன்மை ஒருபுறமிருக்க, பெண்களுக்கே லாபம் இருக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது சுரப்பதால் கர்ப்பப்பை நன்றாக சுருங்குகிறது. கர்ப்பத்திற்கு முன்னால் உள்ளதுபோல் சுருங்கி ரத்தப்போக்கு எல்லாம் குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் அழகு கூடுகிறது. மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது. அதனால்தான் சொல்கிறேன்..தாய்ப்பால் கொடுப்பது முதலில் தாய்க்கு நல்லது.

தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு முழுமையான உணவு. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதிகமாக தொற்றுகள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அலர்ஜி, ஒவ்வாமை போன்றவை வராமல் தடுக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை நன்றாக அணைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். அதற்கு தகுந்தமாதிரி ஆடையை சரி செய்துவிட்டு தாயின் உடலோடு குழந்தையின் உடலை அணைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். தாய்ப்பால் உள்ளே கொடுப்பது மட்டுமே அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் அல்ல, அந்த குழந்தைக்கு, குறிப்பாக மூளைக்கு ஒரு செக்யூரிட்டியாக இருப்பது இந்த அரவணைப்பதுதான். அதனால்தான் தாய்ப்பால் கொடுக்க முடியாத குழந்தைகளைக்கூட தாய்ப்பால் கொடுப்பது போன்று அணைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த அரவணைப்பில்தான், அந்த ஸ்பரிசத்தில்தான் குழந்தையின் மூளைவளர்ச்சி, மனவளர்ச்சி அமையும். பொதுவாகவே தாய் வந்துவிட்டாலே பிறந்த குழந்தைக்கு தெரிந்துவிடும். அதற்கு காரணம் தாயின் வாசம்தான்.

பிளாஸ்டிக் பாட்டில், ரப்பர் கொண்டு குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை முடிந்தவரையிலும் தவிர்த்துவிட வேண்டும். அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுற்றுப்புறச்சூழலின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

அதனால்தான் தாய்ப்பால் என்பதன் அவசியத்தை தாய் மட்டுமல்ல, கணவரும், குடும்பத்தினரும் உணரவேண்டும். இரவில் குழந்தை அழும்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டியதிருப்பதால், காலையில் அந்த தாயிடம் வேலையை எதிர்பார்க்காமல் , ஓய்வு கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதுதான் தாய்ப்பால் கொடுப்பதன் மீது தாய்க்கே வெறுப்பு உண்டாகிறது’’என்றார்.

உண்மைதான். தாய்ப்பால் கொடுப்பதன் பொறுப்பை தாய் மட்டுமல்ல, குடும்பம் மட்டுமல்ல, இந்த சமூகமும் உணரவேண்டும்.