பலாக்கொட்டையின் அசத்தல் பலன்கள்!
முக்கனிகளுள் ஒன்றான பலாவின் சுவைக்கு அனைவரும் அடிமைகள்தான். பலப்பழம் அதிக இனிப்புச் சுவை கொண்டது என்றாலும் புரதம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பழம். பலா பழம் மட்டுமல்ல அதன் கொட்டையிலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
100 கிராம் பலாக் கொட்டையில் 53 கலோரிதான் உள்ளது. 11 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் புரதம், ஒரு நாள் தேவையில் 8 சதவிகித ரிபோஃபிளேவின், 7 சதவிகித தயாமின் உள்ளது.
பலாக் கொட்டையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை செய்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவி செய்வதன் மூலம் ரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களுக்கான வாய்ப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பலாக்கொட்டை காக்கிறது.
செரிமானக் குறைபாட்டை உடனடியாக தீர்க்கும் ஆற்றல் பலாக்கொட்டைக்கு உண்டு. பலாக்கொட்டையை நன்கு காய வைத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். செரிமான பிரச்னை வரும் போது இந்த பவுடரை நேடியாக வாயில் போட்டு வெந்நீர் அருந்தலாம். அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் செரிமானம் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை தீர்க்க உதவும்.
பலாக்கொட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. இது தசைகளை கட்டமைக்க உதவி செய்கிறது. அசைவ உணவில் இருந்து உயர் தரமான புரதம் பெறும்போது அதனுடன் கொழுப்புச் சத்தும் கிடைத்துவிடுகிறது. கொழுப்பு இன்றி தரமான புரதம் பலாக்கொட்டையில் இருந்து கிடைத்துவிடுகிறது.
இதில் உள்ள புரதம் மற்றும் நுண்ஊட்ச்சத்துக்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவி சருமத்தை பொலிவு பெறச் செய்கின்றன.
பலாக்கொட்டையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் நுண் ஊட்டச்சத்து உள்ளது. இதன் காரமணாக செல்கள் வீக்கத்தை தடுக்க, புற்றுநோய் செல்களை அழிக்க, டிஎன்ஏ அளவில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய பலாக் கொட்டை உதவி செய்கிறது.
பலாக் காயை காய வைத்து பொடித்து பாலில் கலந்து சருமத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் நீங்கும். இளமையைத் தக்க வைக்க உதவும்.