முளை கட்டிய தானியங்கள் இத்தனை நோயின் வலையிலிருந்து நம்மை காக்குமா ?
பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டாக்கும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது .. முளை கட்டிய பயறுகளில், புரதம் , கார்போவைதரேட்டு, உயிர்ச்சத்துக்கள் ,பீட்டாகரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. முளைகட்டிய பயறுகள் தினசரி உயிர்ச்சத்து தேவையை உறுதிசெய்யும்.
முளைகட்டிய பயறுகளுக்கு அப்படி என்ன சிறப்பு’ என்ற வினா நம்மிடையே எழக்கூடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருளான முளைகட்டிய உணவில் சாதாரண பயறுகளைவிட ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘கே’ இவற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. புரதச்சத்து இவற்றில் அதிகமாக உள்ளது. நியாசின், தையமின் போன்ற சத்துகளுடன் ஆன்டிஆக்ஸிடென்டுகளும் இவற்றில் அதிக அளவு உள்ளன. மேலும், ஒமேகா அமிலம், இரும்புச் சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் இவற்றில் நிறைந்து உள்ளன.
பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல. அவற்றை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பயறுகளில் தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்துவிடவேண்டும். அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காயவைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கிவிட வேண்டும்.
சர்க்கரை நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) கட்டுக்குள் இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முளை கட்டிய தானியங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். முளை கட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் ஆதாரமாக கருதப்படும் நிலையில், அதன் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இதயத்திற்கு நன்மை பயக்கும் - ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், முளை கட்டிய தானியங்களில் காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தமனிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கிறது - முளை கட்டிய தானியத்தில், வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் புரத சத்து உள்ளதால், உங்கள் கண்பார்வையை கூர்மையாக்க உதவுகிறது. முளை கட்டிய தானியத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இது உங்கள் கண்களின் செல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
எடையைக் குறைக்க உதவும் - முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவுகிறது. முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக எடை கட்டுக்குள் இருக்கும்.