பேய் போல தாக்கும் நோய்களிடமிருந்து தாய் போல் காக்கும் இந்த கீரைகளை சமைக்கும் முறை
இந்திய உணவு கலாச்சாரம் மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம் பற்றி நாம் பேசும் போது அதில் கீரையை தவிர்த்திட முடியாது. ஏனெனில், நமது பாட்டிமார்கள் வைத்தியம் பார்த்ததே கீரை மற்றும் மூலிகை இலை, கொடிகளை வைத்துதான். கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான்.
இன்று நாம் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறோமோ இல்லையோ, வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்கிறோம். இதன் காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான். நமது கால தட்பவெட்ப நிலைக்கு எந்த உணவு உகந்ததோ அதை தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, இது சுவைமிக்க சுவிட்சர்லாந்து உணவு, இது ஆஸ்திரேலியாவில் பிரசித்திபெற்ற உணவு என நமது உடல்நிலைக்கும், கால நிலைக்கும் பொருந்தாத உணவுகளை உட்கொள்ள கூடாது. நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டுள்ள உணவு கீரை.
தேவையானவை: கொத்தமல்லி ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், பெருங்காயம் 3 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லியை மண் போக நன்றாக அலசி, செடியின் வேர்ப் பகுதியை நீக்கி, பொடியாக நறுக்கி, துணியில் போட்டு 4, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஒரு இரும்பு கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து, சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே புளியைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பருப்புக் கலவை, புளி, கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை ஒரு தட்டில் பரப்பி, 3 4 நாட்கள் நிழலில் உலர்த்தி, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தவும். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி மற்றும் தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பலன்கள்: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும்.
நச்சுக்கெட்ட கீரை கூட்டு
இந்தக் கீரையைப் பேச்சுவழக்கில், லஜ்ஜை கெட்ட கீரை’ என்றும் அழைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர், நச்சகற்றி கீரை’ என்பதே. வீடுகளின் முன்பக்கம் அழகுக்காக, குரோட்டன்ஸ் போல வளர்க்கப்படும் இந்தக் கீரை, சத்துக்களின் பெட்டகம்.
தேவையானவை: கீரை 2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு அரை கப், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கீரையை நன்றாக அலசிக் கழுவி, பொடியாக நறுக்கவும். கீரை, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தேவையான உப்பு சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, சீரகம், பெருங்காயம் சேர்த்து, மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கீரைக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.
பலன்கள்: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் காக்கும்.
அகத்திக் கீரை சுண்டல்
தேவையானவை: அகத்திக் கீரை 2 கைப்பிடி, பாசிப்பருப்பு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயைக் கிள்ளிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளித்த பொருட்களைச் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேகவைக்கவும். மிகவும் குழைய வேகவிடக் கூடாது. பருப்பு வெந்ததும், கீரையை உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: அகத்திக் கீரை ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கவில்லையெனில், கீரையைப் பக்குவப்படுத்தி உபயோகிக்கலாம்.
பக்குவப்படுத்தும் முறை: அகத்திக் கீரை அதிகமாகக் கிடைக்கும் சமயத்தில் வாங்கி, ஆய்ந்து, அலசி, ஒரு துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலான இடத்தில் 2 3 நாட்கள் உலரவைத்தால், ஈரம் இல்லாமல் காய்ந்துவிடும். அந்தக் கீரையை, காற்றுப் புகாத டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம். தேவையான சமயங்களில் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவைத்தால், அப்போது பறித்த கீரை போல மாறிவிடும்.
பலன்கள்: எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குடல் புண்ணைப் போக்கும். மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.
தவசி கீரை பொரியல்
தேவையானவை: துளிரான தவசி கீரை தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி தலா 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: கீரையைக் கழுவி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய துளிர் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு முறை கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
பலன்கள்: உடலைப் பலப்படுத்தும். சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தரக்கூடியது.