×

டெங்கு ஏற்பட்டால் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவது ஏன் தெரியுமா?

 

மழை வெள்ள பாதிப்பு காரணமாக நாளுக்கு நாள் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் ரத்தத்தில் பிளேட்லெட் எனப்படும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவிடும். இந்த ரத்த தட்டணுக்கள்தான் ரத்தக் கசிவு நேரத்தில் தடுப்பை ஏற்படுத்தி, ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கிறது. இந்த தடுப்பு தகர்ந்துவிடும் போது எளிதாக ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் எஜிப்டி என்ற பெண் கொசுவால் பரவுகிறது. டெங்கு வைரஸ் தொற்று உள்ள நபரைக் கடிப்பதன் மூலம் கொசுவின் வாயில் வைரஸ் ஒட்டிக்கொள்கிறது. அது மற்றொரு நபரைக் கடிப்பதன் மூலம் அவருக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. உடலுக்குள் நுழைந்த டெங்கு வைரஸ், ரத்த தட்டணுக்களில் நுழைந்து பெருக ஆரம்பிக்கிறது. ஆரோக்கியமான ரத்த தட்டணுக்களை அழிக்கிறது. டெங்கு வைரஸ் கிருமி ரத்த தட்டணுக்களில் இருப்பதால் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியானது, தொற்று இல்லாத தட்டணுக்களையும் தாக்கி அழிக்கிறது. மேலும் வைரஸ் கிருமி எலும்பு மஜ்ஜையில் தாக்கி, ரத்த தட்டணுக்கள் உற்பத்தியைத் தடுக்கிறது. இதனால் மிக வேகமாக ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.

ஆரோக்கியமான நபருக்கு தோராயமாக ஒரு கியூபிக் மில்லி மீட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான ரத்த தட்டணுக்கள் இருக்கும். டெங்கு நோயாளிகளுக்கு அது 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துவிடும். சிலருக்கு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து உயிரிழப்பு போன்ற ஆபத்தை விளைவித்துவிடும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, காய்ச்சல் உச்சத்தில் இருக்கும் 3-4 நாட்களிலேயே தட்டணுக்கள் எண்ணிக்கை சரசரவென குறைந்துவிடும். வயது, நோய் எதிர்ப்புத் திறன், வேறு ஏதும் உடல் நலப் பிரச்னை உள்ளதா என்பதைப் பொருத்து பிளேட்லெட் எண்ணிக்கை குறைவது மாறுபடலாம்.

பிளேட்லெட் எண்ணிக்கை 20 ஆயிரம், 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிட்டால் சுவாசப் பாதை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். இதைத் தவிர்க்க ரத்த தட்டணுக்கள் செலுத்தப்படும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் பப்பாளி இலை கஷாயம், பச்சைக் காய்கறிகள், வைட்டமின் சி, கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பலாம்.