நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கிர்ணி பழம்!
தர்பூசணி, கிர்ணிப் பழம் இல்லாத கோடை இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கோடை வெப்பத்தால் உடலில் ஏற்படும் பாதிப்பைப் போக்கும் மருந்தாக நமக்குக் கிடைத்துள்ளன. கிர்ணி பழத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் இரும்பு, தாமிரம், மக்னீஷியம், துத்தநாகம், கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் (ஜிங்க்) சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் சூழலில் இயற்கையிலேயே கிர்ணி பழத்தில் இருந்து இவை கிடைக்கின்றன.
கோடையின் கொளுத்தும் வெப்பத்தால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை போக்கி, உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கிறது கிர்ணி. வெப்பத்தின் கொடுமையிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, ஏ, துத்தநாகம் உள்ளிட்டவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. வைட்டமின் ஏ மற்றும் பாலிஃபீனால்கள் வயிறு மண்டலத்தில் வாழும் நுண்ணுயிரி மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த நுண்ணுயிரி குடியிருப்பு நம்முடைய ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புகொண்டவையாக உள்ளது.
இதில் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளதால் பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது. கண்புரை நோய் இளம் வயதிலேயே ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இதில் பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது. இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள adenosine ஊட்டச்சத்து ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
கிர்ணி மிகக் குறைந்த கலோரி கொண்டது எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதையும் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் எடுத்தாலும் வயிறு நிறைந்த உணர்வை இது நீண்ட நேரத்துக்குத் தரும். அதனால் பசி குறையும்.
டயாபடிக் நெஃப்ரோபதி எனப்படுவது சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரகத்தின் வடிகட்டிகளான நெஃப்ரான்கள் பாதிக்கப்படுவதாகும். இதைத் தடுக்கும் ஆற்றல் கிர்ணி பழத்துக்கு உண்டு. கிர்ணி மிகக் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் ஏ தலை முடி வேர்க்காலில் சீபம் எண்ணெய் சுரப்பைத் தூண்டி முடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. இதன் அதிக அளவில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.