மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்ய என்ன வழி?
அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று மலச்சிக்கல். மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம் காரணமாக மலச்சிக்கல் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மலம் கழித்தல் பழக்கம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பலருக்கும் தினமும் மலம் கழிக்கும் வழக்கம் இருக்கும். சிலருக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள், வெகு சிலருக்கு இரண்டு - மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று இருக்கும். வாரத்துக்கு மூன்று முறை மலம் கழித்தாலே போதுமானது என்று மருத்துவ உலகம் கூறுகிறது. மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் இருந்தால் அதையே மலச்சிக்கல் என்று மருத்துவ உலகம் வரையறுக்கிறது.
இதனுடன் மலம் மிகவும் உலர்ந்து, இறுகிப்போய் இருப்பது. மலம் கழிக்கும் போது இறுக்கமாக வெளியேறுவது, மலம் கழிக்கும் போது அதீத வலி, மலம் கழிப்பதில் சிரமம், மலம் கழித்த பிறகும் மலம் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருப்பது எல்லாம் ஒருவருக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
மலச்சிக்கல் தவிர்க்க முதலில் செய்ய வேண்டியது அதிக அளவில் தண்ணீர் அருந்துவதுதான். ஒரு நாளைக்கு 7 - 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும், மலம் வெளியேறவும் உதவியாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சோடா, கார்பனேட்டட் குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. இவை எல்லாம் மலச்சிக்கலை இன்னும் மோசமாக்கிவிடும்.
உணவில் அதிக அளவில் நார்ச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைப் போக்க உதவும். நார்ச்சத்து குடல் இயக்கத்தைப் பராமரிக்க உதவும். செரிமான பாதையில் உணவு அடைத்துக்கொள்வதைத் தடுக்கும். நார்ச்சத்து மிக்க உணவு அல்லது மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் நார்ச்சத்துக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் 77 சதவிகித நாட்பட்ட மலச்சிக்கல் நோயைப் போக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாக்கிங், ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது குடல் இயக்கம் சீராகும். இதனால் மலம் எளிதாக வெளியேறும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் காபி, காஃபின் உள்ள பானங்களை அருந்தலாம். அதுவும் மிகச்சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு மலம் வெளியேற உதவும். பலருக்கு காலையில் காபி குடித்த உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இதனால்தான் வருகிறது. காபியில் உள்ள காஃபின் செரிமான மண்டலத்தைத் தூண்டி மலம் வெளியேறத் துணை செய்கிறது.
நம்முடைய செரிமான மண்டலத்தில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியா உள்ளன. அதில் பாதிப்பு ஏற்படுவதும் கூட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். எனவே, நல்ல பாக்டீரியா உள்ள தயிர் உள்ளிட்டவற்றை எடுத்து வருவது மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.