பூமி எங்கள் சாமி - இன்று உலக பூமி தினம்
பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று கொண்டாடப்படுகிறது. புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல். அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது அவசியம் எனவும் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியை புவி நாளாக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் 175 நாடுகளில் புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையை புவி நாளையொட்டிப் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. பல்வேறு ஆண்டுகளில் செயற்கைக் கோளில் இருந்து எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் படங்களைக் கூகுள் தேடுபொறியில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ, கிரின்லாந்தின் செர்மர்சூக் ஆகிய இடங்களில் முன்பிருந்த பனிப்பாளங்களின் அளவு புவி வெப்பமாதலால் குறைந்துகொண்டே வருவதைச் செயற்கைக்கோள் படங்களுடன் உணர்த்தியுள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியரில் பவளப் பாறைகள் அழிந்து வருவதையும், ஜெர்மனியின் ஹர்ஸ் காடுகளின் பரப்பு குறைந்துள்ளதையும் படங்களுடன் விளக்கியுள்ளது. இந்த ஆண்டின் புவிநாளுக்கான கருப்பொருள் நமது கோளில் முதலீடு செய்யுங்கள் என்பதாகும்