உங்களின் சிறுநீர் சொல்லும் முக்கியமான விஷயம்!
பிரச்னை என்று வராதவரை நாம் கவலைப் படுவதே இல்லை. அப்படி நாம் கவலைப் படாத ஒன்று நம்முடைய சிறுநீரகங்கள். தினமும் கழிப்பறைக்கு சென்று வருகிறோம், ஒரு நாளைக்கு 5-6 முறை கூட சிறுநீர் கழிக்கிறோம். இருப்பினும் சிறுநீர் சொல்லும் விஷயத்தை கவனிக்க மறந்துவிடுகிறோம். அப்படி நாம் கவனிக்கத் தவறும், சிறுநீரகம் சொல்ல வரும் விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம்.
சிறுநீர் வெளிர் நிறத்தில் வெளியேற வேண்டும். அடர் நிறத்தில் வெளியேறுகிறது என்றால் நாம் சரியான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்பது முதல் அர்த்தம். இதை உணர்ந்து தண்ணீர் அருந்துவதை அதிகரித்தால் அடர் நிறத்தில் வந்த சிறுநீர் நிறம் வெளிர் நிறத்துக்கு மாறிவிடும். ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது வயது, பாலினம், உடல் நலம் போன்ற காரணங்களைப் பொறுத்து மாறுபடும். சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்த சொல்வார்கள். சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் தண்ணீரை ஸ்பூன் கணக்கில் தான் அருந்த வேண்டியிருக்கும். மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது நல்லது.
நாம் உட்கொள்ளும் உணவு காரணமாகக் கூட சிறுநீரின் நிறம் மாறும். பீட்ரூட் சாப்பிட்டால் அன்றைக்கு வெளிர் பிங்க் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
சில வகையான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் சிறுநீரின் நிறத்தை மாற்றும். குறிப்பாக மலேரியாவுக்கான மாத்திரை எடுக்கும் போது சிறுநீர் அடர் பிரவுன் நிறத்துக்கு மாறும். அதே போல் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கு மருந்து எடுக்கும் போது நிறம் மாறும். இந்த நிற மாற்றம் பற்றி கவலைப் பட வேண்டியது இல்லை.
லேசான மஞ்சள் நிறத்தில் வரும் சிறுநீர் இயல்பானது. மிகவும் வெள்ளையாக வருகிறது என்றால் அதிக அளவில் தண்ணீர் அருந்துகிறோம் என்று அர்த்தம். இதுவும் நல்லது இல்லை. அதிக அளவில் தண்ணீர் அருந்தினால் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேற்றப்பட்டுவிடும். இதனால் உயிரிழப்பு வரையிலும் பாதிப்பு ஏற்படலாம்.
சிறுநீரிலிருந்து துர்நாற்றம் வெளிப்பட்டால் ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம். சில நேரங்களில் நாம் எடுத்துக்கொண்ட மருந்து, உணவு காரணமாகக் கூட துர்நாற்றம் வரலாம். இது தவிர சர்க்கரை நோய், சிறுநீரக பாதை நோய்த் தொற்று, சிறுநீரக நோய், கல்லீரல் நோய் இருந்தாலும் சிறுநீரில் துர்நாற்றம் வரலாம். எனவே, தொடர்ந்து துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
சர்க்கரை நோயை சிறுநீர் மூலமாக கூட கண்டறியலாம். சிறுநீரில் அதிக அளவில் சர்க்கரை வெளியேறுவதை ஆய்வகத்தில் எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம் என்பதால் கவனம் தேவை.
கர்ப்பம் உறுதி செய்யும் பரிசோதனையை இன்று வீட்டிலேயே ஒரு ஸ்டிப் மூலம் செய்துவிடுகிறோம். இதற்குக் காரணம் சிறுநீர் தான். கர்ப்பகாலத்தில் என்.சி.ஜி (human chorionic gonadotropin) என்ற ஹார்மோன் சுரக்கும். இதன் அடிப்படையில் சிறுநீர் மூலமாக கர்ப்பம் அடைந்ததை உறுதி செய்யலாம்.