×

ரஃபேல் விவகாரம்; என்.ராம் வெளியிட்ட அடுத்த திடுக்கிடும் தகவல்!

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அதிக செலவு குறித்த திடுக்கிடும் தகவலை ‘தி இந்து’ மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அம்பலப்படுத்தியுள்ளார் புதுதில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அதிக செலவு குறித்த திடுக்கிடும் தகவலை ‘தி இந்து’ மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அம்பலப்படுத்தியுள்ளார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ்
 

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அதிக செலவு குறித்த திடுக்கிடும் தகவலை ‘தி இந்து’ மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அம்பலப்படுத்தியுள்ளார்

புதுதில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அதிக செலவு குறித்த திடுக்கிடும் தகவலை ‘தி இந்து’  மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை முன் வைத்து வருகிறார். விமானம் வாங்குவதற்கு இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என ராகுல் கூறி வருகிறார்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த சூழலில், ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி இந்து’  மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக பல்வேறு தகவல்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரஃபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டதை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளதாக மற்றொரு அதிர்ச்சிகர தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

வங்கி உத்தரவாதம் அளிக்கும்போது, குறிப்பிடப்பட்ட தொகை ஒவ்வொரு விமானங்களுக்கு குறையும். ஒப்பந்த விலையை விட குறைந்த விலையில் இந்தியா விமானத்தை வாங்கி இருக்க முடியும். ஆனால் இந்தியா இந்த வங்கி உத்தரவாதத்தை பெறாமல் போய் விட்டதால் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

முதலில் இந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட Indian Negotiating Team எனும் பேரம் பேசும் குழு, பிரான்ஸ் தரப்பிடம் வங்கி உத்தரவாதங்களை கேட்டு இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மூலம் பிரான்ஸ் அரசுடன் தனியாக இன்னொரு பேரமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தனிப்பட்ட பேரம் காரணமாக கடைசியில் வங்கி உத்தரவாதம் இல்லாமலே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் மொத்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானங்களுக்கும் இந்தியா 574 மில்லியன் யூரோ அதிகம் கொடுத்து இருக்கிறது. ஒருவேளை வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தால், 574 மில்லியன் யூரோ விலை குறையும். இந்திய ரூபாயின் மதிப்புப்படி பார்த்தால் இது பல கோடிகளை தண்டும்.

பொதுவாக இதுபோன்று பெரிய ஒப்பந்தங்கள் செய்யப்படும் சமயங்களில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படும். ஆனால், பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் அப்படி எந்த விதமான உத்தரவாதங்களும் அளிக்கப்படாததால் விமானத்தில் விலை ஏற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே, இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல், வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதாக என்.ராம் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இரு அரசுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் நடக்கும் போது, நடுவர் மூலம் பணத்தை செலுத்தும் எஸ்க்ரோ (escrow) கணக்கு முறையும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் இரு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் முன்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் தனது கட்டுரையில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.