×

பங்குச் சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் அமோகம்! சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்ந்தது

தீபாவளியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளில் நடைபெற்ற முகூர்த்த வணிகம் மிகவும் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்ந்தது. வடமாநிலத்தவர்கள் தீபாவளி அன்று புதுக்கணக்கை தொடங்குவது வாடிக்கை. மேலும் அன்றைய தினம் இந்திய பங்குச் சந்தைகளில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற முகூர்த்த வர்த்தகத்தில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் டாடா மோட்டார்ஸ்,
 

தீபாவளியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளில் நடைபெற்ற முகூர்த்த வணிகம் மிகவும் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்ந்தது.

வடமாநிலத்தவர்கள் தீபாவளி அன்று புதுக்கணக்கை தொடங்குவது வாடிக்கை. மேலும் அன்றைய தினம் இந்திய பங்குச் சந்தைகளில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற முகூர்த்த வர்த்தகத்தில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், வேதாந்தா, இன்போசிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா மற்றும் ஐ.டி.சி. உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி, பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,652 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 514 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 136 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.150.12 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில்  மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 192.14 புள்ளிகள் உயர்ந்து 39,250.20 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,629.15 புள்ளிகளில் முடிவுற்றது.