×

துப்பாக்கி சூடு எல்லாம் நடக்கல மக்களே.. விஷம செய்திகளை நம்பாதீங்க! காஷ்மீர் போலீசார் வேண்டுகோள்..

ஜம்மு அண்டு காஷ்மீரில் நிலவரம் அமைதியாக உள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்ததாக வெளிவரும் விஷம செய்திகளை நம்பாதீங்க என மக்களுக்கு காஷ்மீர் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கிய 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை பிரித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. வரும் அக்டோபர் 31ம்
 

ஜம்மு அண்டு காஷ்மீரில் நிலவரம் அமைதியாக உள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்ததாக வெளிவரும் விஷம செய்திகளை நம்பாதீங்க என மக்களுக்கு காஷ்மீர் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கிய 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை பிரித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. வரும் அக்டோபர் 31ம் முதல் புதிய யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாக காஷ்மீரில் செல்போன், இன்டர்நெட் சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது. சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் ஒரளவு தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதேசமயம் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் தளர்ததப்பட்ட பிறகும் கடந்த 2 நாட்களாக ஜம்மு காஷ்மீர் அமைதியாகத்தான் இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் புதிய யூனியன் பிரதேசத்தில் நிலவரம் மோசமாக உள்ளதாக கூறினார். அவர் கூறிய  அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டரில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஒரு போஸ்ட் பதிவு செய்தது. ஜம்மு அண்டு காஷ்மீர் போலீஸ் இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் அதில் கூறியிருப்பதாவது: 

ஜோடிக்கப்பட்ட மற்றும் விஷம செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கடந்த 6 நாட்களாக காஷ்மீரில் எந்தவொரு இடத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற வில்லை. சூழ்நிலை அமைதியாக உள்ளது எனவே மக்கள் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஸ்ரீநகர் மற்றும் இதர நகரங்களில் போக்குவரத்து கடுமையாக இருந்தது. இன்று மக்கள் பக்ரீத் பண்டிகை ஷாப்பிங்கில் பிசியாக இருந்தனர். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.