×

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை தொடர்பு கொள்ள ஹாட்லைன் வசதி அறிமுகம்

போலி விசா மோசடியில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாஷிங்டன்: போலி விசா மோசடியில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக்
 

போலி விசா மோசடியில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

வாஷிங்டன்: போலி விசா மோசடியில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலியான கல்வி நிறுவனத்தை அந்நாட்டு போலீசார் உருவாக்கினர். இதில் வழக்கமான பாடத் திட்டங்களோ, வகுப்புகளோ இருக்காது. மாணவர்களும் படிக்கமாட்டார்கள். ஆனால், இங்கு பதிவு செய்த மாணவர்கள், அதன் மூலம் எப் 1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசாவை நீட்டித்து அமெரிக்காவிலேயே தங்க முயற்சி செய்துள்ளனர்.

அதன்படி, சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டறிந்த அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் 130 மாணவர்களை கைது செய்தது. அதில், 129 பேர் இந்தியர்கள்.மற்றொருவர் பாலஸ்தீனியர். இவர்கள் அனைவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதற்காக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் வெளியுறவுத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இந்தியத் தூதரகம், அமெரிக்க அரசுத் துறைகளைத் தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பான தகவல்களை அறிய 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதியை, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்த தகவல்களை அறிய +1 202 322 1190 அல்லது +1 202 340 2590 என்ற எண்களிலோ cons3.washington@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.