×

அரபிக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது . இதனால் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதுடன், அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்  பல ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம் தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மராட்டியம் மற்றும் கோவா அருகே உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.  இதனால் கேரளாவில் மழை வெள்ளம் மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ள நிலையில் இன்று எர்ணாகுளம் ,திருச்சூர் ,இடுக்கி ,கோட்டயம்,  கோழிக்கோடு, காசர்கோடு , கண்ணூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.