குடித்துவிட்டு அடித்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில் குடிக்கு அடிமையான தன் கணவன் மீது மனைவி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரை சேர்ந்தவர் அவதேஷ். இவர் பிரீத்தி என்ற வினிதாவை, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
கூலிவேலை செய்துவந்த அவதேஷ், தினமும் குடித்துவிட்டுவந்து மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினிதா, தனது கணவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். ஜூன் 26-ஆம் தேதி நடந்த இந்தக் கொலையை வினிதா மறைக்க முயற்சித்தார். ஆனால் அவர் நடத்தையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் வந்து அப்பெண்ணிடம் விசாரித்தபோது, அவள் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அப்பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டார்.