×

நடு ரோட்டில் மறிக்கப்பட்ட பிரதமரின் கார்.. நிகழ்ச்சி திடீர் ரத்து... காரணம் என்ன? - பகீர் பின்னணி!

 

பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரப்போகிறது. இதனையொட்டி ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸிடமிருந்து கைப்பற்ற பாஜக துடித்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது கொடி நாட்டிட வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறது. அதேபோல பல்வேறு திட்டங்களையும் மத்திய பாஜக அரசு பஞ்சாப் மாநிலங்களில் செயல்படுத்த உள்ளது. அதன் ஒருபகுதியாக ஃபெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை பிரதமர் மோடி இன்ரு தொடக்கிவைக்கவிருந்தார்.

அதற்காக டெல்லியிலிருந்து அவரது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ஹெலிகாப்டரில் ஹூசைனிவாலா செல்வதாக இருந்தது. அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே பிரதமர் மோடி தரை வழியாக காரில் செல்வதாக திட்டமிடப்பட்டது. அதன்படி பஞ்சாப் மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் வருகையை ஒட்டி அவருடைய வாகனம் வரும் வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி பலத்த கான்வாய் (பாதுகாப்பு அணிவகுப்பு)  பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக பஞ்சாப் வந்து கொண்டிருந்தார். அப்போது ஹூசைனிவாலாவில் அவருடைய கான்வாய் மறிக்கப்பட்டது. அங்கு விவசாய அமைப்புகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடியின் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதற்கு மேல் அங்கு இருந்தால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என அஞ்சி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர். அதேபோல தியாகிகள் நினைவிட நிகழ்ச்சியும் ரத்தானது.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "பிரதமர் மோடியின் வருகை, திட்டம், பேரணி குறித்து பஞ்சாப் மாநில அரசிடம் ஏற்கெனவே தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் முறையான பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது” என்றது. ஏன் விவசாய அமைப்புகள் போராடின என்பதை தெரிந்துகொள்வதும் இங்கே அவசியமாகிறது. விவசாய சட்டங்கள் வாபஸ் பெற்றாலும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை.

மாறாக ஒரு விவசாயி கூட இறக்கவில்லை என்றது. ஆனால் 700 விவசாயிகள் இறந்ததாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் இழப்பீடு கேட்டதற்கு பிரதமர் மோடியோ, "விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்?" என ஆணவத்துடன் பதிலளித்துள்ளார். இதன் காரணமாகவே விவசாய அமைப்புகள் மோடி வரும் முன்பே GoBackModi என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெரோஸ்பூரில் பிரதமர் பேரணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் 3 சாலைகளை கிசான் மஸ்தூர் சங்க்ராஷ் அமைப்பு முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.