ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? - அமித்ஷா விளக்கம்
தனிப்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாகவே முன்னாள் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் அவர்களை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து, அவரை அச்சுறுத்தி வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம்சாட்டிவரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தனிப்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாகவே முன்னாள் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் வேறு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடாது. லாலு பிரசாத்தை காப்பாற்ற மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தவர் ராகுல் காந்தி. 130வது சட்ட திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டு தேர்தலோடு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வை இணைத்துப் பேசுவது தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்த அமித்ஷா, “குடியரசுத் தலைவர் கிழக்கைச் சேர்ந்தவர்,
பிரதமர் மேற்கு மற்றும் வடக்கைச் சேர்ந்தவர் என்பதால், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தெற்கிலிருந்து வருவது இயல்பானது” என்றார்.