×

பயனர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய விதிகள் – மத்திய அரசை எதிர்த்து வாட்ஸ்அப் வழக்கு!

இந்தியாவில் இப்போதைய ஹாட் டாபிக் பேஸ்புக், ட்விட்டருக்கு தடை செய்யப்படுமா? செய்யப்படாதா? என்பது தான். கடைசியில் ட்விட்டருக்கே #IStandWithTwitter என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்யும் நிலைக்கு கொண்டுவந்து விட்டது மத்திய அரசு. வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் கூடி கும்மியடிக்கும் டிஜிட்டல் திண்ணையாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன. எப்போதுமே சமூக வலைதளங்களிலேயே கதி என கிடந்தவர்கள், கொரோனா ஊரடங்கால் அங்கேயே மூழ்கிவிட்டனர். அவர்களுக்கு திடீர் தடை என்ற செய்தி கை, கால்களை உதற வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
 

இந்தியாவில் இப்போதைய ஹாட் டாபிக் பேஸ்புக், ட்விட்டருக்கு தடை செய்யப்படுமா? செய்யப்படாதா? என்பது தான். கடைசியில் ட்விட்டருக்கே #IStandWithTwitter என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்யும் நிலைக்கு கொண்டுவந்து விட்டது மத்திய அரசு. வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் கூடி கும்மியடிக்கும் டிஜிட்டல் திண்ணையாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன. எப்போதுமே சமூக வலைதளங்களிலேயே கதி என கிடந்தவர்கள், கொரோனா ஊரடங்கால் அங்கேயே மூழ்கிவிட்டனர். அவர்களுக்கு திடீர் தடை என்ற செய்தி கை, கால்களை உதற வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அழாத குறையாக பேஸ்புக், ட்விட்டருக்கு பிரிவு உபாச்சாரம் நடத்தினர்.

எதற்காக தடை?

ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய ஐடி விதிகளும் வழிகாட்டு நெறிமுறைகளுமே அதற்குக் காரணம். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் போடலாம் என்ற நிலைக்கு வேட்டு வைக்கிறது இந்தப் புதிய விதிகள். அதேபோல அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது. இனி அங்கும் சென்சார் செய்யப்படும். வெளிப்படையாக அரசை விமர்சிக்கும் காட்சிகளையும் சென்சாரில் தூக்கிவிடுவார்கள். குறிப்பாக எங்கள் மனம் புண்படுகிறது என்று அவ்வப்போது ஒரு குரூப் துள்ளிக் குதிக்கும். இனி அதற்கு அவசியமே எழாது.

24 மணி நேரத்தில் உங்கள் ஐடி முடக்கப்படலாம்

புதிய விதிகளின்படி உங்களின் ட்வீட்டோ, போஸ்ட்டோ சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலும், மத்திய அரசுக்கு அது சர்ச்சையானதாக தெரிந்தால் அந்த ட்வீட்டோ அல்லது அந்த ட்வீட் போட்ட உங்களின் ஐடியோ முடக்கப்படும். அரசு உத்தரவிட்ட அடுத்த 24 மணி நேரத்தில் இது நடந்தே தீர வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை ட்விட்டர் மீதோ பேஸ்புக் மீதோ எடுக்கப்பட வேண்டும். இதற்கென தனி அதிகாரி ஒருவரை நியமிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல அந்த ட்வீட் போட்ட நபரின் தகவலை அரசு எப்போது கேட்டாலும் சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் மறைமுக மிரட்டல்

இந்த விதிகளை பிப்ரவரி 25ஆம் தேதி ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அரசின் விதிகளை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் தொழில் செய்யலாம்; இல்லையென்றால் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு செல்லலாம் என்பதே அவரது பேச்சின் சாராம்சம். இதுதொடர்பாகப் பதிலளிக்க மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது. சரியாக நேற்றோடு அந்த அவகாசம் முடிவடைந்தது. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆறு மாதம் அவகாசம் கேட்டும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியாவில் அந்தத் தளங்கள் தடை செய்யப்படலாம் என தகவல் பரவியது. இந்தச் சர்ச்சை எழுந்த நேற்றே பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசின் அனைத்து விதிகளுடனும் உடன்படுவதாக ஒப்புக்கொண்டு விட்டது.

பேஸ்புக்கிற்கு பங்கம் இல்லை

ஆனால் ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. இச்சூழலில் தாய் நிறுவனமான பேஸ்புக் ஒப்புக்கொண்டுவிட்டாலும் வாட்ஸ்அப் மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது. அரசின் புதிய புதிய விதிகள் தங்களது பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாகவும், அது அரசியல் சாசன சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறது. மக்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் விதமாகப் புதிய விதிகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அலறி துடிக்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் இதற்குப் பதற்றமடைவதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. வாட்ஸ்அப்பை பொறுத்தவரை பயனர்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் யாருக்கும் கொடுக்காது. அதேபோல அவர்கள் செய்யும் மெசெஜ்கள் End to End Encrypt பாலிசியில் செயல்படும். அதாவது அந்த மெசெஜ்களை நிறுவனத்தால் கூட படிக்க முடியாது என்கிறார்கள். சமீபத்தில் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து எழுந்த சர்ச்சை அனைவருக்கும் தெரியும்.

ஏற்கெனவே அந்த விவகாரத்தில் லட்சக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் இழந்திருக்கிறது. இச்சூழலில் அரசின் புதிய விதிகளின்படி, வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை அரசு கேட்டால் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் பயனர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும். இதற்காகத் தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது.