×

சர்ர்ரென எகிறிய கொரோனா... வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - காஷ்மீர் நடவடிக்கை!

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதுமே மூன்றாம் அலை பரவி வருகிறது. முதல் இரு அலைகளைக் காட்டிலும் மூன்றாம் அலை அதிவேகமாக தாக்குகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தொடுவதற்கு முதல் இரு அலைகளுக்கு 1.5 முதல் 2 மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால் மூன்றாம் அலையோ இரண்டே வாரங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. தற்போது 3 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 400ஐ தாண்டி செல்கிறது. இதற்கு ஒமைக்ரானு அதன் பரவும் வேகமுமே காரணம்.

மாநிலங்களில் மட்டுமில்லாமல் யுனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இவ்வளவு நாளும் 500க்கும் கீழே சென்ற தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2,500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. ஸ்ரீநகரில் மட்டுமே 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் விகிதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தலைமைச் செயலர் கீழ் செயல்படும் மாநில செயற்குழு கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வார இறுதி நாட்களில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகள், பயணங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு அரங்குகள், உணவகங்கள், கிளப்கள், ஜிம்கள்,  நீச்சல் குளங்கள் ஆகியவை 25 சதவீதம் மட்டுமே செயல்பட அனுமதி. இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான வகுப்புகள் ஆகிய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். எனினும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.