×

மீண்டும் முழு ஊரடங்கு... இவற்றுக்கு மட்டுமே அனுமதி; தடைகளே அதிகம்!
 

 

இந்தியாவிற்கும் மீண்டும் கொரோனா சூறாவளி அடிக்க ஆரம்பித்துள்ளது. இம்முறை மூன்றாம் அலையாக அச்சுறுத்த வந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு அலைகளில் தலைநகர் டெல்லி படாத பாடு பட்டது. இரண்டாம் அலையில் டெல்லியின் ஒட்டுமொத்த சுகாதார உட்கட்டமைப்பே ஆட்டம் கண்டது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அல்லல்பட்டனர். சுடுகாடுகளில் பிணங்கள் வரிசை கட்டின. பெரும் பாதிப்புகளைச் சந்தித்த மாநிலங்களில் டெல்லிக்கு தான் முதலிடம். முதல் அலையில் இதை விட கொஞ்சம் உக்கிரம் குறைவான பாதிப்பு ஏற்பட்டது.

இச்சூழலில் மூன்றாம் அலை தலைநகரை மிரட்டி வருகிறது. டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு ஆட்டம் காட்டுகின்றன. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாமிடத்தில் இருக்கிறது டெல்லி. கடந்த வாரத்தை விட கொரோனா தொற்று மும்மடங்கு உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் முன்பை விட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதாகவே அம்மாநில அரசு தெரிவித்தது. இதனையொட்டி மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும் மூன்றாம் அலையைச் சமாளிக்க அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இச்சூழலில் இன்று அவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த டெல்லி பேரிடர் மேலாஅண்மை ஆணையம், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடந்தது. இதில் கோவிட் தடுப்பு குழு நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் வார இறுதி நாள்களில் முழு ஊரடஙகை பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் வெள்ளிக் கிழமைக இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மற்றும் சேவைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. தேவையின்றி வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதேபோல மற்ற நாட்களிலும் மக்கள் அத்தியாவசிய தேவையன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாமென அரசு கூறியுள்ளது. கட்டாயம் அலுவலகம் வரும் சூழலில்லாத அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தியுள்ளது. தியேட்டர், ஜிம்கள் மீண்டும் மூடப்படுகின்றன.