×

வார இறுதிநாட்களில் ஊரடங்கு! வெள்ளி இரவு 10 மணி- திங்கள் காலை 5 மணிவரை கட்டுப்பாடு

 

கர்நாடக மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் இரட்டிப்பாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் புதிதாக மாநிலத்தில் அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் தற்பொழுது நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் மற்றும் கர்நாடக மாநில அரசு நியமித்த வல்லுநர் குழு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2,479 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட கிட்டதட்ட இரு மடங்கு. இன்று பெங்களூரு நகரில் மட்டும் 2,053 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், 288 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

இதனிடையே கர்நாடக முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா அதிகரித்து வருவதால், வரும் 21 ஆம் தேதி வரை வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 10 தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனவும், இதர வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் ( ஹோட்டல், தியேட்டர், பப், என அனைத்து இடங்களிலும்) 50 சதவீதம் மட்டுமே அனுமதி, திருமணத்திற்கு மண்டபங்களில் 100 நபர்கள் திறந்த வெளி திருமண நிகழ்ச்சிகளில் 200 நபர்கள் பங்கேற்க அனுமதி, மஹாராஷ்டிரா கேரளா கோவா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக வைரஸ் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.