வயநாடு நிலச்சரிவு : ‘மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’ - ராகுல் காந்தி இரங்கல்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக சூரல்மலை பகுதியில் இரு பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளால் சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இதில் சுமார் 400 குடும்பங்கள் தனிமைபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது.
மாநிலம் முழுவதிலும் இருந்த பேரிடர் மீட்புக் குழுவினர் வயநாட்டிற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராணுவம் மற்றும் விமானப்படையும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்புகிறேன்.
கேரள முதலமைச்சர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை எங்களுக்குத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சரிடம் பேசவுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுமாஉ அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.