×

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை- வெங்கையா நாயுடு

 

சாதாரண குடிமகனை விட வேறுபட்ட அதிகாரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக நேற்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்தின் கூட்ட தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எப்படி ஒரு உறுப்பினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு இன்றைய தினம் பதில் அளித்த அவை தலைவர் வெங்கைய நாயுடு நாடாளுமன்றத்தின் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதன் உறுப்பினர்கள் கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதில் இருந்தோ அல்லது தற்காத்துக் கொள்வதற்காகவோ எவ்வித விலக்கும் அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது புலனாய்வு அமைப்புகள் மூலமாக கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்துவதற்கோ உறுப்பினர்களுக்கு சலுகை உள்ளது என நினைக்கக் கூடாது என்பதற்காக தான் இவ் விஷயத்தை மாநிலங்களவையில் தெளிவுபடுத்துவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். 

அரசியலமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் சிவில் வழக்குகளில் இருந்து மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிமினல் குற்ற வழக்குகளுக்கு எவ்வித விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.