×

டெல்லி அரசின் புனித யாத்திரையில் தமிழக கோயில் சேர்ப்பு!

 

2018ஆம் ஆண்டு டெல்லி அரசு முதலமைச்சர் தீர்த்த யாத்திரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாக ரயிலில் ஆன்மீக சுற்றுலா செல்லலாம். யாத்திரா திட்டத்தின் கீழ் பூரி, ராமேஸ்வரம், சீரடி, ஹரித்வார், மதுரா, திருப்பதி உள்ளிட்ட 13 புன்னிய தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த தலங்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலா அனுப்பி வருகிறது டெல்லி அரசு. இதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் டெல்லி அரசே ஏற்றுக்கொள்ளும்.

இரண்டு ஆண்டுகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்தத் திட்டம் அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் யாத்திரா திட்டத்தை தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியிலிருந்து ஆயிரம் பயணிகளுடன் முதல் யாத்திரை ரயிலானது அயோத்திக்கு புறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மற்றும் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா கோயில் ஆகியவை தலங்களைச் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தலங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்வார்கள். பதிவுசெய்யும் தேதியின் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஒருவருடன் 21 வயதான உதவியாளரும் செல்லலாம்.