×

உத்தரகாண்டில் கனமழை... வெள்ளம்... நிலச்சரிவு - 46 பேர் பலி; 100 பேரின் நிலை என்ன?

 

சமீப நாட்களாக கேரள மாநிலத்தை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உலுக்கியது. நிலச்சரிவு, வெள்ள பாதிப்பில் சிக்கி சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்போது அங்கு மழையின் அளவு குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாதிப்பின் தீவிரமே அடங்காத நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பாதிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் அதீத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முக்கிய நகரமான நைனிடால் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பிவழிவதால் உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.  குஜராத் மாநிலத்தில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட 100 யாத்ரீகர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. வெள்ளத்தில் ரயில் தண்டவாளமே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கக் கூடும் என மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.