இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் முடங்கியது ஏர்டெல் நெட்வொர்க் ..- பயனாளர்கள் அவதி...
இந்தியா முழுவதும் பல்வேறு பெரு நகரங்களில் ஏர்டெல்; நெட்வொர்க் முயங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகினர். தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு விட்டதாக ஏர்டெல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருந்து வருகிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை முடங்கியதால், பயனாளர்கள் மொபைல், இன்டர்நெட் சேவை மட்டுமின்றி, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாக பல பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நெட்வொர்க் டவுன் டிடெக்டர் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நெட்வொர்க் முடக்கத்தால் அனைத்து பயனர்களையும் பாதிக்கப்படவில்லை. சிலருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சிலர் தொடர்ந்து அழைப்பு மற்றும் இணைய சேவைகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்த முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப் பட்டு விட்டதாக ஏர்டெல் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த ட்விட்டர் பதிவில், “எங்கள் இணையச் சேவைகளில் சிறிது தடங்கல் ஏற்பட்டது, இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால், எல்லாம் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.” என்று தெரிவித்திருக்கிறது.