×

“டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்” – வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம்
 

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது.

இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின. ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. சட்ட ரீதியாக வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம்.

இதுதொடர்பாக கருத்தரங்கில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “இந்தியாவில் சமூக வலைதள நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அதற்காகத் தான் புதிய ஐடி விதிகளைக் கொண்டுவந்தோம். ஆனால், ஒருசில சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு எதிராக பேசி வருகின்றன.

லாபம் ஈட்ட இந்தியா வந்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் (ட்விட்டர், வாட்ஸ்அப்) ஜனநாயகம் குறித்தும் கருத்து சுதந்திரம் குறித்தும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தொழில் செய்ய வேண்டுமென்றால் எங்கள் சட்டங்களை பின்பற்றுங்கள். இல்லையென்றால் கிளம்புங்கள். புதிய விதிமுறைகளுக்கு இணங்க கூடுதல் அவகாசம் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால் ட்விட்டர் மதிக்கவில்லை. உடனடியாக அரசு வழங்கும் சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்” என்றார்.