×

பிஎஃப்ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பு.. 5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு...

 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்கள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்துள்ள மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு  தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்,  பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்திருக்கிறது என்றும்,  பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிப்பது மற்றும்  ஆட்கள் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக  பல்வேறு புகார்கள் எழுந்தன.  இதனையடுத்து இது தொடர்பான புகாரின்பேரில், தமிழ்நாடு, கேரளா உள்பட  நாடு முழுவதும்  15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனையை மேற்கொண்டது.  இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

 அத்துடன்,  போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக,  தமிழ்நாடு, கேரளாவில்  இந்த சோதனைக்குப் பிறகு பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.  இதனை தொடர்ந்து, நேற்று  2வது முறையாக உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனையின் போதும்  பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில்,  இதுவரை மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது  பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த  மத்திய  உள்துறை அமைச்சகம்,  அதற்கு  தடை விதித்துள்ளது. அதாவது  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான  இந்த தடை நடவடிக்கை  உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.