×

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 

விவசாய பெருமக்களின் ஓராண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி போராட்டக்களத்திலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்களிடம் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்தன. 

இருப்பினும் முழுவதுமாக ரத்துசெய்யும் வரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என அறிவித்துள்ளனர். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் இன்று வரை அது செயல்படுத்தப்படவில்லை. அதேபோல இந்த அறிவிப்பும் நீர்த்துபோகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என விவசாயிகள் கேள்வி கேட்டனர். இதனால் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்தனர். இதனிடையே நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. 

இதில்  சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என கூறப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். அதன்பின் முறைப்படி இந்த சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டதாக அரசாணை வெளியிடப்படும்.