☰
×

சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து- இரு மாணவிகள் துடி துடித்து பலி 
 

 

கர்நாடகாவில் சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டம், மகதி தாலுகாவில் உள்ள குடேமரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே அதிவேகமாக சென்ற கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் இருந்து குனிகல் பகுதியில் நடைபெறும் Activity Class-ல் பங்கேற்பதற்காக இரண்டு மாணவர்கள் மற்றும் நான்கு மாணவிகள் என மொத்தம் ஆறு பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது, குடேமரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த கனவி, வைஷ்ணவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலும், மற்ற இருவர் நெலமங்களாவில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாலோ அல்லது அதிவேகமாக காரை இயக்கியதாலோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நெலமங்களா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து குடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.